“இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன்” - மிஷ்கின் பகிர்வு

“இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன்” - மிஷ்கின் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: இளையராஜாவிடம் சண்டை போட்டுவிட்டேன் என்றும், அதனால் இசையமைக்கச் சொல்லி மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது என்றும் ‘டெவில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.03) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கதிர், வெற்றிமாறன், ஆர்.கே.செல்வமணி, வின்செண்ட் செல்வா, பாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது: “இன்று எனக்கு கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தரும் ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர் என்றால், எனக்கு இன்னொரு குருநாதரும் இருக்கிறார். அவர் இளையராஜா, அவர் கால்களில் விழுந்து வணங்குகிறேன். எட்டு வயதாக இருக்கும்போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, ‘அன்னகிளியே உன்னத் தேடுதே’ பாடலை கேட்டேன். அன்று முதல் ராஜா எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா? அவருடன் சண்டை போட்டுவிட்டேன். எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது.

மேலும், மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க முடிவு செய்தேன். இந்த இசைப் பயணத்தின் மூலம் நான் எந்த இடத்துக்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால், அது இளையராஜாவின் காலடிகள்தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள்தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல” என்று மிஷ்கின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in