‘ஜெய்பீம்’ 2 ஆண்டுகள் நிறைவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

‘ஜெய்பீம்’ 2 ஆண்டுகள் நிறைவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
Updated on
1 min read

சென்னை: ‘ஜெய்பீம்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி கொடுத்துள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான குறிப்பை பகிர்ந்து நடிகர் சூர்யா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், “உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்..அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்.” என தெரிவித்துள்ளார்.

ஜெயம்பீம்: கடந்த 2021-ம் ஆண்டு இதே நாளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஞானவேல் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்திருந்தனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இருளர் மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in