

சென்னை: விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதை முன்னிட்டு இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு கார் பரிசளித்துள்ளார் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இதில் ரித்துவர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 5 நாளில் ரூ.50 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.
இதன்பின், படம் வெளியாகி 19 நாட்களில், உலக அளவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியதாக சொல்லப்பட்டது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தை முன்னிட்டு இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு கார் பரிசளித்துள்ளார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். பிஎம்டபிள்யு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தயாரிப்பாளர் வினோத் மற்றும் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.