

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சிபிஐ அதிகாரியாக முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுரேஷ் மேனன், படத்தில் தனக்கு பயன்படுத்தப்பட்ட டப்பிங் குரல் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்தியில் பேசுகிறார். 44 விநாடிகளே அந்த வீடியோ நீள்கிறது. ஆனால், அதில் அவரது குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.
அந்த வீடியோவின் கீழ், "தானா சேர்ந்த கூட்டத்தில் எனது குரல் ஏன் இடம்பெறவில்லை எனக் கேட்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசியிருந்தேன். ஆனால், படத்தில் வேறு ஒரு குரலை பயன்படுத்தியுள்ளனர். என்னுடைய குரல் மாதிரியை இந்த வீடியோ மூலம் கேளுங்கள். எனது சொந்தக் குரலே எனது கதாபாத்திரத்துக்கு சிறப்பாகப் பொருந்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். படத்தைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்" என்றொரு நிலைத்தகவலையும் பகிர்ந்திருக்கிறார்.
அதன் கீழ், பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சுரேஷ் மேனனின் கருத்தை ஆமோதித்துள்ளனர். சிலர், இந்தக் குரலை பயன்படுத்தாதது படத்துக்கே இழப்பு எனத் தெரிவித்துள்ளனர்.