

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தும், விக்ரமும் இணையும் படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகிவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல படத்தின் டீசர் நவம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக “தங்கலான் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும். 2024-ல் சிறந்த படமாக அமையும். நடிகர் விக்ரமுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கும்” என்று இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.