

சூர்யாவை இழிவுபடுத்திய தரக்குறைவான விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கொந்தளிப்பது போலவே இனி எப்போதாவது பெண்கள் இழிவுபடுத்தப்பட்டாலும் கொந்தளிக்க வேண்டும் என நடிகை வித்யுலேகா ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
பிரபல மியூசிக் சேனலில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தொகுப்பாளினிகளுக்கும் சம்பந்தப்பட்ட சேனலுக்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அதுவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் சூர்யாவுக்காக அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சேனலையும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்களையும் வசைபாடி வருகின்றனர். அதற்கு மேலேயும் சென்று சேனலை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நடிகை வித்யுலேகா தனது ட்விட்டர் பக்கத்தில், "சூர்யாவை இழிவுபடுத்திய தரக்குறைவான விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கொந்தளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இனி எப்போதாவது பெண்கள் இழிவுபடுத்தப்பட்டாலும் இதேபோல் பெரிய சர்ச்சையாக்குங்கள். அதை நீர்த்துப்போக விடாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.