Published : 18 Oct 2023 05:38 AM
Last Updated : 18 Oct 2023 05:38 AM

எம்.ஜி.ஆரின் ‘நீரும் நெருப்பும்’ படத்துக்காகக் குவிந்த குதிரைப்படை!

அலெக்சாண்டர் டூமாசின் ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்’ நாவலை மையப்படுத்தி 1949ம் ஆண்டு தமிழில் உருவான திரைப்படம், ‘அபூர்வசகோதரர்கள்’. எம்.கே.ராதா, பானுமதி நடித்த இந்தப் படத்தைத் தயாரித்தது எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோ. இதே கதையில் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் ‘நீரும் நெருப்பும்’. தந்தையைக் கொன்றவனை மகன்கள் வளர்ந்து பழிவாங்கும் கதைதான்.

இந்தப் படத்தை நியோ மணிஜே சினி புரொடக்‌ஷன் சார்பில் டி தெஹ்ரானி தயாரித்தார். எம்.கே.ராதா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதிவேடத்தில் ஜெயலலிதாவும் நடித்தனர். எம்.ஜி.ஆர்., மணிவண்ணன், கரிகாலன் என்ற 2 கேரக்டர்களில் நடித்திருப்பார். ஒரு வேடத்தில் கருப்பானத் தோற்றம் கொண்டவராக நடித்தார்.

இவர்கள் தவிர அசோகன், மனோகர், சி.எல்.ஆனந்தன். தேங்காய் சீனிவாசன், மனோரமா உட்பட பலர் நடித்துள்ளனர். ஆ.கே.சண்முகம் வசனம்எழுதியிருந்த இந்தப் படத்துக்குஎம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ‘கன்னி ஒருத்திமடியில்’, ‘மாலை நேரத்தென்றல்’, ‘கடவுள் வாழ்த்துப் பாடும்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

ஜெமினி ஸ்டூடியோவில் உருவானஇந்தப் படத்தின் வாள் சண்டை அப்போது பேசப்பட்டது. சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆருக்கு டூப்பாக கே.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். எம்.ஜி.ஆரின் பலபடங்களில் அவர் டூப்பாக நடித்திருக்கிறார். ஒரு எம்.ஜி.ஆர் வலது கையாலும் இன்னொருவர் இடது கையாலும் வாளைச் சுழற்றி போட்ட சண்டைகள் அதிகம் ரசிக்கப்பட்டன.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, நிஜ வாள் கொண்டு எப்படி சண்டையிடுகிறீர்கள் எனக் கேட்டு, எம்.ஜி.ஆரிடம் தனது வியப்பைத் தெரிவித்து இருக்கிறார்.

தர்மேந்திராவுடன் எம்.ஜி.ஆர்

இதற்கு முன் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாகாரன்’ சூப்பர் ஹிட்டாக ஓடிஇருந்ததால் ‘நீரும் நெருப்பும்’ படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில் முதல் காட்சியைப் பார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வந்திருந்தனர். கூட்டம்கட்டுக்கடங்காமல் இருந்தது. அதைக் கட்டுப்படுத்த குதிரைப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஆனால், பெரும் வெற்றியை இந்தப் படம் பெறவில்லை. எம்.ஜி.ஆர் நடித்த கரிகாலன் கதாபாத்திரத்தையும் ஒரு எம்.ஜி.ஆர் படத்தில் இறப்பதையும் ரசிகர்கள் ஏற்கவில்லை என்று அப்போது பேசப்பட்டது. 1971-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x