Published : 17 Oct 2023 05:04 AM
Last Updated : 17 Oct 2023 05:04 AM

பராசக்தி: சிவாஜி கணேசனின் திரையுலக சக்சஸ்

சிவாஜி கணேசன் என்கிற மகா கலைஞனை அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘பராசக்தி’. தமிழில் சரித்திர, புராணக் கதைகள் மட்டுமே அதிகம் படமாக்கப்பட்டு வந்த காலத்தில், தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றிய படம், இது.

1950-களில் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’, டி.எஸ்.நடராஜனின் ‘என் தங்கை’ நாடகங்கள் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்தன. இரண்டும் தங்கை பற்றிய கதையை கொண்டது என்பதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்க முயற்சி செய்தது, கோவை சென்டரல் ஸ்டூடியோஸ் நிறுவனம். பாலசுந்தரத்துக்கு இதில்விருப்பமில்லாததால் வேறொரு தயாரிப்பாளரிடம் பராசக்தி நாடகத்தின் உரிமையை விற்றுவிட்டார். எம்.ஜி.ஆர் நடிப்பில் ‘என் தங்கை’ அதே பெயரில் படமாக உருவானது.

பின்னர் ஏவிஎம் படங்களை விநியோகித்து வந்த பி.ஏ.பெருமாள், ‘பராசக்தி’யின் உரிமையை வாங்கி நேஷனல் பிக்சர்ஸ் பேனரில் திரைப்படமாக்கினார். முதலில் இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்க இருந்தார். பின்னர் கிருஷ்ணன்-பஞ்சு இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

மு.கருணாநிதி, திரைக்கதை, வசனம் எழுதினார். சிவாஜி, நடித்த நாடகங்களைப் பார்த்த பி.ஏ.பெருமாள், அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். அவர் ‘பூங்கோதை’ என்ற படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தாலும் இந்தப் படம்தான் அவருக்கு அறிமுகப்படமாக அமைந்தது.

படம் 2000 அடிகள் எடுக்கப்பட்ட பின்,படத்தைப் பார்த்த ஏவி மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு திருப்தியளிக்கவில்லை. கே.ஆர்.ராமசாமி அல்லது டி.ஆர்.ராமச்சந்திரனை நாயகனாக்கி படத்தை எடுக்கச் சொன்னார். ஆனால், தயாரிப்பாளர் மறுத்துவிட்டார். ‘அவர் ஒல்லியாக இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்கள். அவர் உடலை தேற்றினால் சிறப்பாக இருப்பார்’ என்று கூறி, அதற்காகவே ஒருவரை நியமித்தார். அவர் உடல்நன்றாகத் தேறிய பின் படப்பிடிப்புத் தொடங்கியது. அப்போது சிவாஜியின் நடிப்பைப் பார்த்துவிட்டு ஏவிஎம் செட்டியார் பாராட்டியிருக்கிறார்.

சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, குமாரி கமலா உட்பட பலர் நடித்திருந்தனர். மாருதி ராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.சுதர்சனம் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. ‘புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’, ‘கா கா கா’ உட்பட பாடல்கள் ஹிட்டாயின.

சாதாரண கதையைக் கொண்ட படம்தான்.ஆனால், தனது திரைக்கதை, வசனத்தால் பரபரப்பாக்கி இருந்தார் மு.கருணாநிதி. அதுவரை பாடல்களில் மயங்கிக் கிடந்த ரசிகர்கள், வசனங்களுக்கு மயங்கத் தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். சாதி, மதம், சமூக சமத்துவமின்மையை கேள்விகேட்ட இந்தப் படத்தின் வசனங்கள் கூர்மையாக இருந்தன.

இதில் இடம்பெறும் நீதிமன்ற காட்சிக்கும் கோயிலுக்குள் சிவாஜி பேசும் வசனத்துக்கும் பலத்த வரவேற்புக் கிடைத்தது. இதில் இடம்பெற்ற நாத்திக கருத்துகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அது, படத்துக்கு விளம்பரமாக மாறி, மெகா வெற்றி பெற்றது.

இந்தப் படத்துக்காக, நடிகர் சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.250. ‘சம்பளமே இல்லை என்றாலும் இந்தப் படத்தில் நடித்திருப்பேன்’ என்று கூறியிருந்தார் சிவாஜி. அதே நேரம், ‘ஏவிஎம் ஸ்டூடியோவில் வளர்ந்த மரங்கள் தண்ணீரால் வளரவில்லை. என் கண்ணீரால் வளர்ந்தன’ என்றும் கூறியிருக்கிறார் சிவாஜி.

இந்தப் படத்தின் அறிமுக காட்சியில் சிவாஜி கணேசன் பேசும் வசனம், 'சக்சஸ்... சக்சஸ்...’ ஏவிஎம் ஸ்டூடியோவில் அந்த வசனம் பேசப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் ஒன்றை வைத்திருக்கிறது ஏவிஎம்் நிறுவனம்.

1952ம் ஆண்டு இதே நாளில் வெளியான பராசக்தி, 71 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x