

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஜிகர்தண்டா 2'. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:
‘ஜிகர்தண்டா’ படத்தின் சேது கேரக்டருக்கு முதலில் ராகவா லாரன்ஸிடம்தான் நடிக்கக் கேட்டேன். அப்போது சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. படம் வெளியானபிறகு அவர், சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. அப்போது ஸ்கிரிப்டாக அது எனக்குத் திருப்தியாக வரவில்லை. அதனால் நானே அதைபிறகு பண்ணலாம் என்று விட்டுவிட்டேன். இந்த கதை, சரியான நேரத்தை எடுத்துக் கொண்டு இப்போது உருவாகி இருக்கிறது.
இந்தப் படம் 1975-ல் நடக்கும் கதையைக் கொண்டது.‘ஜிகர்தண்டா’வுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை. இதில் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநராகவும் நடித்திருக்கிறார்கள். 2 பேரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனி ஸ்டைல் இருக்கிறது. ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் நடிப்பைப் பார்த்துவிட்டு இதில் அவரைப் பார்க்க வித்தியாசம் இருக்கும். நிமிஷா சஜயன் கேரக்டர் வலுவானதாக இருக்கும். நவீன் சந்திரா, சஞ்சனா, ஷைன் டாம் சாக்கோ, சத்யன், இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை மலைக்கிராமம் ஒன்றில் படமாக்கினோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 பேரைத் தேர்வு செய்து, சூரி என்பவர் மூலம் 2 மாதம் பயிற்சி அளித்தோம். அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறினார். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, சந்தோஷ் நாராயணன் உடனிருந்தனர். இந்தப் படத்திலிருந்து ‘மாமதுர’ என்ற பாடல் நேற்று வெளியானது.