Published : 10 Oct 2023 05:45 AM
Last Updated : 10 Oct 2023 05:45 AM
தமிழ் சினிமா தொடங்கிய முதல் 10 வருடங்களில், படம் இயக்கிய, திரைக்கதை எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில இலக்கியங்களை அதிகம் படித்தவர்கள். அதனால் ஆங்கில நாடகம் மற்றும் நாவல்களைத் தமிழில் படமாக்கி வந்தனர். அப்படியொரு படம்தான், ‘விசித்திர வனிதா’.
ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ‘ஷி ஸ்டூப்ஸ் டு கான்குயர்’ (She Stoopsto Conquer) என்ற நகைச்சுவை நாடகத்தைத் தழுவி உருவான படம் இது. இதை இயக்கியவர், ‘தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று அழைக்கப்படும் கே.சுப்பிரமணியன்.
தவறான அடையாளங்கள் மக்களிடையே வேடிக்கை மற்றும் தவறானப் புரிதலுக்கு வழி வகுக்குகிறது என்பதுதான் கதை. இதை அழகான திரைக்கதை மூலம் தமிழுக்கு ஏற்றபடி சிறப்பாக மாற்றியிருந்தார் கே.சுப்பிரமணியன்.
அப்போது டெல்லியில் இருந்து வந்திருந்த ‘சித்ரா’ கிருஷ்ணசாமி ஹீரோவாக நடித்தார்.(பின்னர் இவர் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்தார்). பி.எஸ்.சரோஜா, புளிமூட்டை ராமசாமி, அங்கமுத்து, கே.எஸ்.மணி உட்பட பலர்நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் பிரபல பாடகியான பி.ஏ.பெரியநாயகி, இதில் குணசித்திர வேடத்தில் நடித்தார்.
இதன் பெரும்பாலான காட்சிகள் சென்னை நெப்டியூன் ஸ்டூடியோவில் படமாயின. லட்சுமணன் இசை அமைத்திருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெளியான படம்என்பதால், காந்தியவாதியான கே.சுப்பிரமணியன் அதிகமாகத் தேசபக்தி பாடல்களை இடம்பெறச் செய்தார். அந்தப்பாடல்களும் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. படத்தில், பி. எஸ். சரோஜா, புளிமூட்டை ராமசாமியின் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது.
1947-ம் ஆண்டு இதே நாளில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT