‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் பிரபல நடிகர் மகனிடம் மோசடி

‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் பிரபல நடிகர் மகனிடம் மோசடி
Updated on
1 min read

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி. இவர் தமிழில், சரவணா, சென்னை காதல், கவுரவம், சாகசம், தி வாரியர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் மகன் சஞ்சய் ராவ். தெலுங்கு நடிகரான இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு செல்நம்பரை குறிப்பிட்டுள்ள அவர், “இந்த நபர் தன்னை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மானேஜர் நடராஜ் அண்ணாதுரை என்று கூறி, பலரிடம் பேசி வருகிறார். லோகேஷ் இயக்கும் அடுத்த படத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆடிஷனுக்கான காஷ்ட்யூமுக்கு நீங்கள் வாடகை செலுத்த வேண்டும். ஆடிஷன் முடிந்ததும் அந்தத் தொகை திருப்பிச் வழங்கப்படும் என்று கூறி புதிய வகை பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். எச்சரிக்கையாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையே தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள நடிகர் பிரம்மாஜி, “தமிழ்நாட்டில் இருந்து இன்னொருவரான சத்யதேவ் என்பவர்் நடிப்பு ஆசையில் இருப்பவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எச்சரிகையாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து சஞ்சய் ராவ் கூறும்போது, “என் தந்தை அந்த நம்பரை அனுப்பியதால் பேசினேன். ‘விக்ரம் 2’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு தம்பியாக நடிக்க வேண்டும், புகைப்படங்களை் அனுப்புங்கள் என்றார். அனுப்பினேன். பிறகு காஸ்ட்யூம் வாடகை ரூ.30 ஆயிரம், மற்ற செலவுகளுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்புங்கள். பின்னர் இந்த தொகை திருப்பி கொடுக்கப்படும் என்றார். அதை நம்பி ரூ.45 ஆயிரம் அனுப்பினேன். என் மனைவியிடம் சொன்னபோது, பெரிய நிறுவனங்கள், ‘இப்படி பணம் கேட்காதே’ என்றார். சந்தேகம் வந்ததால், அந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச்டு ஆப் என்று வந்தது” என கூறியுள்ளார். இந்த மோசடி தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in