

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரான பாரதிராஜா, சென்னையில் திரைப்பட பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்குகிறார்.
ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களை இயக்கியவர் இயக்குநர் பாரதிராஜா. கிராமம் சார்ந்த கதைகள் மண் மணம் மாறாமல் திரையில் காட்டுவதில் வல்லவர்.
'16 வயதினிலே', 'அலைகள் ஒய்வதில்லை', 'டிக்.. டிக்.. டிக்..' உள்ளிட்ட படங்களின் வரிசையில் பல வெற்றிப் படங்களைத் தந்த தேசிய விருது வென்ற இயக்குநர் இவர்.
இவர், தற்போது சென்னையில் சர்வதேச தரத்தில் திரைப்பட பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்கவுள்ளார். இதற்கான பணிகளின் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறும்போது, "திரைப்பட பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இதில் எவ்வித லாப நோக்கமும் இல்லை. இந்தச் சமூகம் கடந்த காலங்களில் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அந்தச் சமூகத்துக்கு நான் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். அதற்காகவே இந்த முயற்சி" என்றார்.