

சென்னை: ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை அடுத்து கே.திருஞானம் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஒன் 2 ஒன்’. சுந்தர்.சி., அனுராக் காஷ்யப், ராகிணி திவேதி, நீது சந்திரா, விஜய் வர்மன், பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று வெளியானது.
படம் பற்றி இயக்குநர் திருஞானம் கூறும்போது, “இது ஆக்ஷன் த்ரில்லர் படம். ஹீரோவின் குழந்தை திடீரென காணாமல் போகிறது. ஏன் காணாமல் போகிறது, யார் குழந்தையை கடத்தினார்கள் என்பது கதை. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருக்கிறார். மெட்ரோ ரயிலில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு இரவு 12 மணி முதல் 4 மணிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். அந்தக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சிறப்பு அனுமதி பெற்று சில காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.