Published : 30 Sep 2023 05:46 AM
Last Updated : 30 Sep 2023 05:46 AM

திரை விமர்சனம்: சந்திரமுகி 2

தொழிலதிபரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில், பல்வேறு மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. குலதெய்வ கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இப்படி நடப்பதாகச் சொல்கிறார், குருஜி (ராவ் ரமேஷ்). இதனால் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்கின்றனர். இதில், வேற்று மதத்தவரை திருமணம் செய்ததால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட மகளின் குழந்தைகளும் கலந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அந்தக் குழந்தைகளுடன் கார்டியன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) வருகிறார். கோயில், சந்திரமுகி பங்களா இருக்கும் ஊரில்தான் இருக்கிறது. அந்த பங்களாவின் ஓனரான முருகேசனிடம் (வடிவேலு) பேசி, தங்குகின்றனர். ஆனால், அவர்களைக் குலதெய்வ கோயிலில் பூஜை செய்யவிடாமல் தடுக்கிறது ‘சந்திரமுகி’. அது ஏன்? அதை மீறி அவர்கள் பூஜை செய்தார்களா, இல்லையா?என்பது மீதி கதை.

ரஜினி, ஜோதிகா நடித்து 2005-ம் ஆண்டில் வெளியான ‘சந்திரமுகி’, ஹாரர், த்ரில்லர் என பயங்காட்டி, சிரிப்பில் மூழ்கடித்து, மாஸ் ஆக்‌ஷனில் லாஜிக் மறக்கடித்து குஷி படுத்தியிருந்தது, ரசிகர்களை. அதில் எதுவெல்லாம் பிளஸ் பாயின்டாக இருந்ததோ, அதெல்லாம் ‘சந்திரமுகி 2’ படத்தில் ‘மிஸ்சிங்’. அந்தப் படத்தில் உளவியல் பிரச்சினையைத் தொட்டிருந்த இயக்குநர் பி.வாசு, இதில் ஆத்மா, பேய், தெய்வசக்தி என்ற வட்டத்துக்குள் கதையை இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறார்.

முதல் பாகத்தில் வேட்டையனை கொன்றுவிட்ட சந்திரமுகி, 2-ம் பாகத்திலும் ஏன் வந்துகொல்ல வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

இரண்டாம் பாதி பிளாஷ்பேக்குக்கு, ரசிகர்களைத் தயார்படுத்த வேண்டிய முதல் பாதி திரைக்கதை, அதைச் செய்யாதது பெரும் ஏமாற்றம். சந்திரமுகியும் வேறுமாதிரி வேட்டையனும் வந்ததும் கதைக்குள் ஆர்வமாக உட்கார முடிகிறது. ஆனால், அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வேட்டையன் சந்திரமுகியையும் சந்திரமுகி வேட்டையனையும் கிளைமாக்ஸில் பழிவாங்குவார்கள் என்பது தெரிந்துவிடுவதால் அதற்கடுத்த திரைக்கதையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பாண்டியன், வேட்டையன் என இரண்டு கேரக்டர்களில் வரும் ராகவா லாரன்ஸ் ரஜினி மேனரிசத்தை அப்படியே நகலெடுத்திருக்கிறார். அது சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது. வேட்டையன் கேரக்டரும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகிறது.

இரண்டாம் பாதியில் சந்திரமுகியாக வருகிறார் கங்கனா. அந்த தோற்றம், நடனம், நடிப்பு அவருக்கு ம்ஹும். வேட்டையனுக்கும் அவருக்கும் நடக்கும் அந்த வாள் சண்டையில் மட்டும் கவனிக்க வைக்கிறார். மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அந்த கேரக்டர் சப்பென்று போய்விடுகிறது. பழைய முருகேசனின் (வடிவேலு) ஃபயர் இதில் சுமார்தான். ‘பேய்க்கு வயசானா தலைமுடி நரைக்குமா?’ என்ற அவரின் கேள்வியும் லாரன்ஸின் பதிலும் ‘பழசை’ ஞாபகப்படுத்தினாலும் ரசிக்கலாம்.

ராதிகா, சுரேஷ் மேனன், விக்னேஷ், ரவிமரியா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சிவாஜி, ராவ் ரமேஷ் என பெருங்குடும்பம் படத்தில். இதில், லட்சுமி மேனனுக்கு மட்டுமே கொஞ்சம் நடிக்க வாய்ப்பு.

கீரவாணி இசையில் ‘ஸ்வாகதாஞ்சலி’ தவிர வேறு பாடல்கள் ஒட்டவில்லை. பின்னணி இசை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு பேய் படத்துக்கான வேலையைச் செய்திருக்கிறது. படத்தில் ஆறுதலான விஷயங்களில் ஒன்று, தோட்டா தரணியின் கலை இயக்கம்.

முதல் பாக கதையை ஓரமாக வைத்துவிட்டு கொஞ்சம் புதுமையாக யோசித்திருந் தால், ‘சந்திரமுகி 2’ நிறைவைத் தந்திருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x