

'ப்ரேமம்' படம் பார்த்துவிட்டு அஜித் மற்றும் விஜய் இருவரும் வாழ்த்தியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நிவின் பாலி.
தமிழில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'ரிச்சி' திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக சென்னைக்கு வந்து படத்தை பல்வேறு வகைகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் நிவின்பாலி.
'ரிச்சி' படம் தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் அஜித் மற்றும் விஜய் இருவருமே 'ப்ரேமம்' படம் பார்த்துவிட்டு பாராட்டியதை நினைவுகூர்ந்திருக்கிறார் நிவின் பாலி. இருவரின் பாராட்டு குறித்து அவர் கூறியிருப்பதாவது:
'ப்ரேமம்' படத்தை அஜித் சார் பார்த்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்துவிடவே டின்னருக்கு அழைத்தார். பிரியாணி எல்லாம் சமைத்து பரிமாறினார். என்னை எந்தவொரு வேலையுமே செய்யவிடவில்லை. சாப்பாடு போக முழு இரவும் படங்கள் குறித்து பேசினோம். அவருடைய சினிமா அனுபவங்கள், நான் எந்தமாதிரியான படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என நிறைய விஷயங்கள் கூறினார். அவரை பார்த்து புகைப்படம் எடுத்துவிட்டு, வந்துவிடலாம் என்று தான் சென்றேன். ஆனால், காலை 4 மணி வரை பேசிவிட்டு தான் திரும்பினேன்.
விஜய் சாருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அப்படத்தில் அவருக்கு பிடித்த காட்சிகள் பற்றி பேசினார். உச்சத்திலிருக்கும் நட்சத்திரத்துக்கு யாரோ ஒருவருடைய படைப்பைப் பற்றி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்ட வேண்டிய தேவையில்லை. இருப்பினும், அவர் அதைச் செய்தார். என்னுடைய கடந்த நாட்களையும், வருங்கால திட்டங்களை கேட்டறிந்தார் விஜய் சார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.