செப்.25-ல் பாலாவின் ‘வணங்கான்’ முதல் தோற்றம் 

செப்.25-ல் பாலாவின் ‘வணங்கான்’ முதல் தோற்றம் 
Updated on
1 min read

சென்னை: இம்மாதம் 25-ம் தேதி பாலாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளல் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in