காமெடியில் கலக்கிய ‘தேன்மழை’

காமெடியில் கலக்கிய ‘தேன்மழை’
Updated on
1 min read

அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள முக்தா சீனிவாசன் எண்ணி நான்கு படங்கள், நினைவில் நின்றவை, பொம்மலாட்டம், தேன்மழை, ஆயிரம் பொய் ஆகிய காமெடி படங்களை இயக்கி இருக்கிறார். இந்தப் படங்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன.

‘தேன்மழை’ படத்தில் ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, குமாரி சச்சு உட்பட பலர் நடித்தனர்.

தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவர், புகைப்பட ஸ்டூடியோ நடத்தும் ஜெமினி கணேசன். தூக்கத்தில் நடந்து வந்து ஒருவரைக் கொன்றுவிட்டதாக அவர் மீது பழி போடுகிறார் சுந்தர்ராஜன். பிறகு அவரை, பிளாக் மெயிலும் செய்கிறார். உண்மை குற்றவாளி யார் என்பதை நாகேஷும் சோவும் எப்படி கண்டுபிடித்து ஜெமினி கணேசனை மீட்கிறார்கள் என்பது கதை.

ரொமான்டிக் காமெடி படமான இதன் டைட்டில் கார்டை கார்ட்டூன் ஸ்டைலில் போட்டிருப்பார்கள்.

டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருந்தார். ‘விழியால் காதல் கடிதம்’, ‘நெஞ்சே நீயே’, ‘ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ’, ’கல்யாண சந்தையிலே’, ‘என்னடி செல்லக்கண்ணே’ உட்பட ஐந்து பாடல்கள். சில பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இதில் நாகேஷ், சோவின் காமெடி அதிகமாகப் பேசப்பட்டது. படத்துக்குப் பெரும் பலமான இந்த காமெடி ஜோடியுடன் மனோரமாவும் இணைந்து கொண்ட பிறகு இன்னும் களைகட்டியது. நடிகை சச்சு, சோவுடன் இணைந்து நடித்த முதல் படம் இது.

‘பார் மகளே பார்’ படத்தில் அறிமுகமான சோ-வுக்கு இது 3-வது படம். அவர், இந்தப் படத்துக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியான நேரத்தில் இந்தத் தலைப்புக்கும் படத்துக்கு என்ன சம்பந்தம்? என்று அப்போது பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. அதையும் தாண்டி இந்தப் படம் வெற்றி பெற்றது.

1966-ம் ஆண்டு இதே நாளில்தான் ‘தேன்மழை’ வெளியானது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in