தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ 

தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ 
Updated on
1 min read

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இப்போது வெளியாகும் அப்போது வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த இப்படம் ஒருவழியாக தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. கதையில் மாற்றம் செய்திருப்பதால் அவர் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் படக்குழுவோ, ஐஸ்வர்யா ராஜேஷோ இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in