“அது முற்றிலும் பொய்.. மானநஷ்ட வழக்கு தொடர்வேன்” - விஜய் ஆண்டனி எச்சரிக்கை

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Updated on
1 min read

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு பங்கு இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புப்படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே! அந்த யூடியூப் சேனல் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மானநஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்”. இவ்வாறு விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in