Last Updated : 15 Sep, 2023 04:55 PM

 

Published : 15 Sep 2023 04:55 PM
Last Updated : 15 Sep 2023 04:55 PM

மார்க் ஆண்டனி Review: எஸ்.ஜே.சூர்யாவின் அதகளமும், மாறாத ஆதிக் ‘டச்’களும்!

கேங்க்ஸ்டர் கதையில் டைம் ட்ராவலை இணைந்து திரையரங்கில் ரசித்து மகிழும் ‘வைப்’ அனுபவத்தை கொடுக்க முயன்றியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.

ஓப்பன் பண்ணா 1975. ஆண்டனி (விஷால்) மற்றும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) இருவரும் சென்னையில் ஆகப்பெரிய கேங்க்ஸ்டர் நண்பர்கள். ரவுடிசத்தால் மொத்த நகரையும் ஆட்டிபடைக்கிறார்கள். மற்றொரு கேங்க்ஸடரான ஏகாம்பரம் (சுனில்) தன்னுடைய தம்பியைக் கொன்ற ஆண்டனியை பழிவாங்க துடிக்கிறார். அதற்காக பக்காவாக ஸ்கேட்ச் போட்டு ஆண்டனியை கொன்றுவிட்டு தலைமறைவாகிறார். உயிருக்கு உயிரான நண்பன் ஆண்டனியை கொன்ற ஏகாம்பரத்தை பழிதீர்க்க நினைக்கிறார் ஜாக்கி பாண்டியன். அதேசமயம் ஆண்டனி இல்லாத இடத்தில் தன்னுடைய முழு ராஜாங்கத்தையும் நிறுவி மாஸான கேங்க்ஸ்டராக வலம் வருகிறார்.

இதற்கு மறுபுறம் விஞ்ஞானியான சிரஞ்சீவி (செல்வராகவன்) டைம் ட்ராவல் தொலைபேசி ஒன்றை கண்டுபிடிக்க, அந்த தொலைபேசி 20 வருடங்கள் கழித்து ஆண்டனியின் மகன் மார்க் (விஷால்) கைகளில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி கேங்க்ஸ்டரான தனது அப்பாவை தொடர்பு கொண்டு கடந்த காலத்தை மாற்ற முயலும் மார்க்கின் முயற்சிகளும், அதையொட்டி நடக்கும் சம்பவங்களும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் திரைக்கதை.

கேங்க்ஸ்டர் கதைக்குள் டைம் ட்ராவலை நுழைத்து காட்சிகளை முன்னும் பின்னுமாக களைத்துப்போட்டு சோர்வில்லாத திரைக்கதையைக் கொண்டு நகர்த்தியிருப்பது படத்துக்கு பெரும் பலம். நிறைய சுவாரஸ்யமான ஐடியாக்கள் திரையரங்கை ‘வைப்’ மோடுக்கு கொண்டு செல்கின்றன. உதாரணமாக, ‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’, ‘வருது வருது விலகு விலகு’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற பாடல்களை ரெஃபரன்ஸாக வைத்திருக்கும் காட்சிகள், எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் ‘வாலி’, ‘அமராவதி’யை படஙகளை குறிப்பிட்டு பேசுவது, ‘ஒருதலை ராகம்’ போஸ்டர், ‘அனகோன்டா’ துப்பாக்கி, எல்லாவற்றையும் தாண்டி சில்க் ஸ்மிதாவின் ரீகிரியேஷன் காட்சி திரையரங்கை ஆர்ப்பரிக்கச் செய்கிறது. அதிலும் அந்தக் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா செய்யும் அதகளம் பியூர் வைப் மொடு.

ஆனால், மகா திரைக்கலைஞர் ஒருவரின் தோற்றத்தை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் பொறுப்புடன் செயல்படுவது முக்கியம். அந்த வகையில் சில்க் ஸ்மிதாவை ‘க்ளிஷே’வாக காட்சியப்படுத்திய விதம் நெருடல். போலவே தன்பால் ஈர்ப்பாளராக காட்சிப்படுத்தபட்டிருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தை இத்தனை இழிவுபடுத்தி காட்ட வேண்டுமா? ஆதிக் ரவிச்சந்திரனின் வழக்கமான பெண்கள் மீதான வெறுப்பை உமிழும் காதல் தோல்வி பாடல் ஒன்றும் தேவையற்று இடம்பெற்றிருப்பது ரித்து வர்மா கதாபாத்திரத்தைப் போல தேவையற்ற ஆணி.

அம்மா சென்டிமென்ட் பாடலும், கனெக்ட் ஆகாத எமோஷனல் காட்சிகளும், லாஜிக் மீறல்கள் படத்துக்கு ஆங்காங்கே வேகத் தடைகள். ‘எல்லாரும் செத்த பொணத்துக்கு முன்னாடி தான் ஆடுவாங்க, ஆனா ஆண்டனி ஒருத்தனுக்கு முன்னாடி ஆடுனா அவன் பொணமாகப் போறான் அர்த்தம்’ என ‘கேஜிஎஃப்’ பாணியில் விஷாலுக்கு நிழல்கள் ரவி கொடுக்கும் பில்டப்பை சகித்துக்கொண்டாலும், ‘காஞ்சனா’ பட சீரிஸில் ராகவா லாரன்ஸ் ஆடிக்கொண்டே கொலை செய்யும் காட்சியை அந்த பில்டப்புக்கு நியாயம் சேர்க்க வைத்திருப்பது ஆகப்பெரும் சோகம்!

டைட்டில் கார்டில் ‘நடிப்பு அரக்கன்’ என எஸ்.ஜே.சூர்யாவின் பெயருக்கு முன்னால் ஒரு பட்டம். உண்மையில் அத்தனைக்கும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருக்கிறார். அவரின் தனித்துவமான உடல்மொழி, குரலில் காட்டும் ஏற்ற இறக்கம், அப்பா - மகன் உரையாடல், நகைச்சுவையுடன் கூடிய வில்லத்தனம், மூச்சுவிடாமல் பேசுவது என ரசிக்க வைத்து படம் அயற்சி தரும் இடங்களில் பேட்ச் ஒர்க் செய்து காப்பாற்றுகிறார்.

டெரராகவும், அப்பாவியாகவும் இரு வேறு கதாபாத்திரங்களில் தனது வழக்கமான நடிப்புடன் உடல்மொழிகளில் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார் விஷால். இறுதியில் வரும் சர்ப்ரைஸ் லுக், வில்லத்தனமான சிரிப்பு என எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும் விஷால் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். ‘அவன் தொட்டான் நீ தொட விட்ட’ என விஷால் பேசும் காட்சிகள் ரகளை.

தனது கதபாத்திரத்தை செதுக்கி அவருக்கான இடத்தில் ‘மாஸ்’ கூட்டும் சுனில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கான ஃபேவரைட் நடிகர் பட்டியலில் இணைவார் என்பது உறுதி. ‘சிரஞ்சீவி’ பெயரும், லுக்கும் க்ளைமாக்ஸ் என்ட்ரியும் ‘செல்வராகவன் சார் நீங்களா?’ என கேட்கும் அளவுக்கு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரித்து வர்மா, ரெடின் கிங்க்ஸ்லீ கதாபாத்திரங்கள் வீணடிப்பு. நிழல்கள் ரவி, விஷ்ணு பிரியா காந்தி, அபிநயா, சென்ராயன் தங்களுக்கான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

படத்தின் மற்றொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ். திரையரங்கை தெறிக்கவிடும் பின்னணி இசையில் மிரட்டுவதுடன், ‘ஆண்டனி டா’ என டி.ராஜேந்திரன் குரலில் ரசிக்க வைக்கும் பாடல் ஒன்றையும் கொடுத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி ஒரு சோற்று பதம். இரு வேறு காலங்களையும் நான் லீனியர் முறையில் நேர்த்தியாக தொகுத்த விஜய் வெல்லக்குட்டி எடிட்டிங்கில் சுட்டி. பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் சண்டைக் கலைஞர்களின் உழைப்பு ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்க வைப்பதுடன் ‘மாஸ்’ தருணங்களை உறுதி செய்கிறது.

மொத்தமாக, ஆங்காங்கே தென்படும் சில குறைகளைத் தாண்டி திரையரங்குகளில் கண்டு ரசிக்கும் ‘வைப்’ அனுபவத்துக்கும் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களுக்கும் ‘மார்க் ஆண்டனி’ நல்ல மார்க்கை பெற்று தர வாய்ப்பு அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x