

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஆக்ஷன் ஹீரோ ஆகிவிட்டார் விஷால். கடந்தவாரம் காரைக்குடியில் உள்ள சில லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புதுப்படத்தை டிவியில் ஒளிபரப்புவதைக் கேள்விப்பட்டு போலீஸாருடன் சென்று அவர்களை கைது செய்ய வைத்திருக்கிறார். ‘பூஜை’ படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கேட்டோம்.
“ஒரு தாய் தன்னோட குழந்தையை 10 மாசம் சுமக்குறா. 10 மாசத்துக்கு பிறகு நல்லதோ, கெட்டதோ இறக்கி வைச்சுடறா. ஆனால், தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களை எத்தனை மாதங்கள் சுமக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சில சமயம் அது வருடக்கணக்கில்கூட நீண்டு போகும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர் களுக்கு இங்கு நடக்குற அநியாயங்கள் இருக்கே.. அது கொஞ்சநஞ்சமல்ல” என்று கோபத்தில் கொப்பளித்தார் விஷால். அவரை மெல்ல ஆசுவாசப் படுத்தி பேட்டியைத் தொடங்கினோம்.
காரைக்குடியில் நடந்த சம்பவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து டி.வி பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது அங்குள்ள லோக்கல் சேனல்களில் ‘வடகறி’, ‘உன் சமையல் அறையில்’ ஆகிய படங்களைப் போட்டுக்கொண்டிருந் தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது. அந்த கோபத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
உடனடியாக அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். போலீஸ் அதிகாரிகளோடு அந்த லோக்கல் கேபிள் சேனல் ஆபீஸ் போனால், அங்குள்ளவர்களுக்கு அது ஒரு பெரிய குற்றமாகவே தெரிய வில்லை. மிகவும் அசால்ட்டாக பதில் சொன்னார்கள்.
அதேநேரத்தில் போலீஸ் அதிகாரிகள் எனது புகார் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்தனர். இதற்காக அவர்க ளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
புதுப் படங்களை ஒளிபரப்புவதற்கு பல இணையதளங்களும் இருக்கிறதே... அவற்றையெல்லாம் என்ன செய்வீர்கள்?
இந்த விஷயம் எனக்கு தெரிந்தது, போனேன். இதே போல் திருட்டு சிடி மூலமாக லோக்கல் சேனல், பஸ் என்று எல்லாவற்றிலும் புதுப்படங்களை போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் தடுக்க அறைக்குள் அமர்ந்துகொண்டு போராடினால் ஜெயிக்க முடியாது. வீதியில் இறங்கவேண்டும். நான் இறங்கி னேன். இதற்காக எனக்கு பலர் போனில் வாழ்த்து கூறினார்கள்.
அவர்கள் ஒளிபரப்பியது என் படம் கிடையாது. வேறு ஒரு தயாரிப்பா ளர், நடிகரோட படமாக இருந்தாலும் நான் சம்பந்தப்பட்ட துறையில்தானே அவர் களும் இருக்கிறார்கள்? இப்படி திருட்டு சிடி தயாரிப்பவர்களுக்கு பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது. தங்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை கடுமையான சட்டம் மூலம் தண்டித்தே ஆகவேண்டும். காரைக்குடியில் மட்டுமல்ல பொள்ளாச்சி, வேலூர், பாண்டிச்சேரி இப்படி பல இடங்களில் இவர்களின் வியாபாரம் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்.
நான் பார்த்த போது, 'வடகறி' படம் ஓடிக்கிட்டு இருந்தது. அதற்கு மேலேயே THIRUTTUVCD.COM என்று பெரிய எழுத்தில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள். என்ன தைரியம் பாருங்கள். அதுமட்டுமில்லை, அவர்கள் திரையிட்டதைப் போன்ற பிரின்டை தயாரிப்பாளர்கூட பார்த்திருக்க மாட் டார்! அவ்வளவு சுத்தமாக இருக்கிறது! இனிமேல் திருட்டி சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று மக்களிடம் சொல்வதைவிட அதைத் தயார் செய்பவர்களை ஒழிக்கவேண்டும்.
திருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் இணைந்து, இதற்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி அரசாங்கத்திற்கு மனு கொடுக்கவேண்டும். திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களையும் ‘ஏன் திரையரங்குக்கு போகிறீர்கள்? நான் வீட்டிலேயே காட்டுகிறேன்’ என்று சொல்லி ஒளிபரப்புபவர்களை பிடிக்கவேண்டும். ஒருத்தரோட வீட்டில் களவு போனால் அதை வேடிக்கை பார்க்காமல் உங்களால் முடிந்த உதவியைப் பண்ணுங்கள். ஏனென்றால் நாளைக்கு உங்களது வீட்டிலும் களவு போகலாம். அதனால் இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்றி ணைய வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
பூஜை படத்தின் படப்பிடிப்பு எந்த அளவில் இருக்கிறது. தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் உங்களுக்கு ஏதாவது காயம் பட்டுக்கொண்டே இருக்கிறதே?
படத்தை கிட்டத்தட்ட முடிக்க போறோம். 3 பாடல்கள் மட்டும் பாக்கி. படப்பிடிப்பு என்று வந்தால் அடிபடத்தான் செய்யும். என்கூட சண்டைக் காட்சிகளில் அடி வாங்கறாங்களே அவங்களுக்கு படாத அடியா எனக்கு பட்டுடப் போகுது? எத்தனை அடிபட்டாலும் நான் என் வேலையில் இருந்து பின்வாங்குவதே இல்லை.
‘மதகஜராஜா’ எப்போது வெளியாகும்?
என்னோட நண்பர்கள் உட்பட அனைவருமே கேட்கும் கேள்வி இதுதான். நீங்க தயாரிப்பாளரிடம் கேட்டால் மட்டுமே இதற்கு சரியான பதில் கிடைக்கும்.
சுந்தர்.சியுடன் இணையும் ‘ஆம்பள’ படம் பற்றி..
'ஆம்பள' தலைப்பை இப்போதைக்கு வைத்திருக்கிறோம். இன்னும் அதுதான் தலைப்பா என்பது முடிவாகவில்லை. எப்பவுமே நான் தயாரிக்கிற படங்கள் எப்போது வெளியாகும் என்பதை படப்பிடிப்பு தொடங்கும் அன்றே முடிவு செய்து விடுவோம். அதே மாதிரி தான் சுந்தர்.சி இயக்கும் படம் 2015 பொங்கலில் வெளியாகும் என்று முடிவு செய்துவிட்டோம்.