“பிரகாஷ்ராஜ் கூறியதை வழிமொழிகிறேன்” - தேசிய திரைப்பட விருது குறித்து திருமாவளவன் கருத்து

“பிரகாஷ்ராஜ் கூறியதை வழிமொழிகிறேன்” - தேசிய திரைப்பட விருது குறித்து திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தே என் கருத்து” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் ‘ரெட் சாண்டல்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனிடம், ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் பிரகாஷ்ராஜ் மிக அருமையாக இதற்கு பதில் கூறியிருக்கிறார். காந்தியைக் கொன்றவர்கள், அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது வழங்குவார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார். அதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.

‘ஜெய்பீம்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். கன்டென்ட் ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்தப் படம் வெகுஜன மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் நடிப்பு, இசை சிறப்பாக இருந்தது. எல்லோரின் பாராட்டையும் பெற்ற படம். அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. கிடைக்காததால் இந்த விமர்சனம் எழுகிறது” என்றார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளதே? என கேட்டதற்கு, “இது மிகவும் முரண்பாடானது. இந்த ஆட்சியாளர்கள் எந்த சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள், கலைத் துறையை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை இந்த விருதுகளின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காததற்கு உங்களுக்கு இருக்கும் அதே ஆதங்கம் தான் எனக்கும் இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் கருத்தை சார்ந்த எழுத்து, படைப்புக்கு விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்படித்தான் செய்கிறார்கள். இந்த அரசு திரைத்துறையில் அதிகம் தலையீடு செய்கிறது. அவர்களின் வெறுப்பு அரசியலை விதைக்க திரைத்துறையை பயன்படுத்துகிறார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in