

'ஸ்டார்', 'ரட்சகன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்த். தற்போது 'புலிப்பார்வை' என்னும் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பை போலவே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து படமெடுத்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் பிரவீன்காந்த் "பாலசந்திரன் என்ற சிறுவன் எப்படி பிரபாகரனால் வளர்க்கப்பட்டான்? அவன் ராணுவ வீரர்களால் பிடிபட்டபோது கண்களில் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தது எப்படி? அவன் படுகொலை செய்யப்பட்டது எப்படி என்பது தான் 'புலிப்பார்வை'
அதை தாண்டி எவ்வித அரசியலுக்கும் நான் போகவில்லை. முதலில் இப்படியொரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன், முழுமையான ஸ்கிரிப்டை சென்சார் அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதித்து, எதையெல்லாம் தொட்டால் அனுமதி கிடைக்காதோ, அதையெல்லாம் தவிர்த்து இந்த படத்தை எடுத்தேன். விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரியல்ல என்பதை இந்த படத்தில் பல காட்சிகளில் விவரித்திருக்கிறேன். சப் டைட்டிலாக ‘வீ லவ் இண்டியா’ என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நல்லவேளையாக இந்த படத்திற்கு முறையான சென்சார் அனுமதியும் பெற்றுவிட்டேன் " என்றார் இயக்குநர் பிரவீன்காந்த்
படத்தில் பாலச்சந்திரனாக நடித்திருக்கும் சிறுவன் சத்யா, "இப்படத்தில் நடிப்பதற்காக எனது பள்ளிக்கு இயக்குநர் பிரவீன்காந்த் நேரில் வந்து என்னை தேர்வு செய்தார். என்னோடு இன்னொரு சிறுவனையும் தேர்வு செய்தார். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் இப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பிராத்தனை செய்தேன். அது நிறைவேறியுள்ளது" என்றார்.
இப்படத்தில் வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுக்கிறார். அவரே இப்படத்தில் பிரபாகரனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.