

'கத்தி' பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தமிழர் அமைப்புகளை சந்தித்துள்ளனர்.
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு 'கத்தி' திரைக்கு வரவிருக்கிறது. நாளை முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின.
இதனை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்கள். தற்போது மீண்டும் இப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று 'கத்தி' இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் கருணா மூர்த்தி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளை சந்தித்து பேசியுள்ளனர்.
"தயாரிப்பாளர் கருணாவோடு பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகிய தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்திக்க இருக்கிறோம்" என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
விரைவில் வைகோவையும் சந்தித்துவிட்டு, தமிழர் அமைப்புகளின் அறிக்கையோடு 'கத்தி' இசை வெளியீட்டு தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.