வேண்டுமென்றே ஒரு திரைப்படத்தைத் தாக்குவது முறையானதல்ல: நிவின் பாலி பேட்டி

வேண்டுமென்றே ஒரு திரைப்படத்தைத் தாக்குவது முறையானதல்ல: நிவின் பாலி பேட்டி
Updated on
3 min read

மலையாளப் படங்களை விரும்பிப் பார்க்காத தமிழ் ரசிகர்களை,  ஹவுஸ்ஃபுல் வரை கொண்டு சென்றிருக்கிறது இவரது திரைப்படங்கள். இன்றைய தேதிக்கு, தமிழ்ப் பெண்களின் ஆதர்ச நடிகர் என்று இவரைத்தான் கொண்டாடுகிறார்கள். மலர், செலின், மேரி போல் தமிழில் ஜார்ஜும் நடிக்க வந்துவிட்டார்.

தமிழில் நடிப்பது குறித்தும், 'ரிச்சி' படம் குறித்தும் நிவின் பாலி, ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியது:

தமிழில் அறிமுகமாகிறீர்கள். புதிதாகவோ அல்லது மலையாள ரீமேக்கையோ தேர்ந்தெடுக்காமல், கன்னட ரீமேக்கை ஏன் தேர்வு செய்தீர்கள்?

இந்தக் கன்னடப் படம் நன்றாக இருந்தது. நல்ல ஸ்டைலான படம் இது. ‘ரிச்சி’ கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் இதற்கு முன் இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. கதையில் ஒரு சில மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

தமிழில் நடிக்கும்போது ஏன் ஒரு பெரிய இயக்குநருடன் அறிமுகமாகாமல், ஒரு புதிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறீர்கள்? படம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதனாலா?

கதை நன்றாக இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். பெரிய இயக்குநர், புது இயக்குநர் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. படம் என் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதெல்லாம் இல்லை. எல்லாக் காட்சிகள் குறித்தும் நாங்கள் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுத்தோம்.

படத்தின் கதையில் உங்கள் பங்களிப்பு என்ன?

கதையில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால், இயக்குநரிடம் தெரிவிப்பேன். அந்த மாற்றம் தேவை என்றால், அதை அவர் ஏற்றுக்கொள்வார். கதை குறித்து எங்களுக்குள் நிறைய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.

ஏன் கெளதம் ராமச்சந்திரனை இயக்குநராகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் இதற்கு முன் நிறைய புது இயக்குநர்களுடன் நடித்துள்ளேன். அதனால், அறிமுக இயக்குநர்களுடன் நடிப்பதில் எனக்கு பயம் இல்லை. கெளதம் படத்தில் நான் நடிக்க என் உள்ளுணர்வுதான் காரணம். கதை நன்றாக இருக்கிறது என்று உள்ளுணர்வு கூறியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

மலர், செலின், மேரி என கிட்டத்தட்ட எல்லோரும் தமிழுக்கு வந்துவிட்டனர், நீங்கள் தமிழில் நடிக்க ஏன் இவ்வளவு தாமதம்?

மலையாளத்தில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தது, அதனால் தான் தமிழில் நடிக்க முடியவில்லை. எல்லாம் தெளிவான பிறகு, தமிழுக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்துள்ளது.

விஜய் சேதுபதி போல், குறும்படங்களைப் பார்த்து இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பீர்களா?

குறும்படம் பார்த்து இயக்குநர்களைத் தேர்வு செய்யும் எண்ணம் இருந்தது. நல்ல படமாக இருந்தால், கண்டிப்பாக தேர்வு செய்யலாம்.

ஃபகத் ஃபாசில், துல்கர் போல ரிஸ்க் எடுக்காமல், சேஃப் சோனிலேயே சென்றுவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

சேஃப் சோன் என்றால் என்ன? அந்த மாதிரி நான் எந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்? சேஃப் சோன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று தான் நடிக்கிறேன்.

தமிழ் உச்சரிப்பை மேம்படுத்த எதாவது செய்திருக்கீற்களா?

டப் செய்யும் போது, நிறையப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். மலையாள உச்சரிப்பிற்கும் தமிழ் உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில இடத்தில் அழுத்தி வாசிக்க வேண்டும், சில இடத்தில் கூடாது. சிறிது சிரமப்பட்டாலும், நன்றாகத் தான் பேசியுள்ளேன்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் நடித்த அனுபவம்?

இந்தப் படத்தில் நாங்கள் குறைந்தபட்சம் அரை நாள் மட்டுமே சேர்ந்து நடித்தோம். எங்கள் கதாபாத்திரம் அப்படி. அதனால், சேர்ந்து நடித்த அனுபவம் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஃப்லிம் ஃபேர் மற்றும் சைமா விருதுகளில் சந்தித்துக் கொண்டோம்.

த்ரிஷா உடன் நீங்கள் மலையாளத்தில் நடிக்கும் படம் குறித்து?

த்ரிஷா எல்லோருடனும் இயல்பாக பழகக்கூடியவர். பெரிய ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், எளிமையாக நடந்துகொண்டார். எல்லோருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது.

மக்கள் சமூக வலைதளங்களில் திரைப்படங்களை விமர்சிப்பதை குறித்து?

எல்லோருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், வேண்டுமென்றே ஒரு திரைப்படத்தைத் தாக்குவது முறையானது அல்ல. ஏனென்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் நிறைய சிரமமும் உழைப்பும் உள்ளது.

ரிச்சி திரைப்படம் பற்றி சில வார்த்தைகள்?

இந்தப் படத்தில், இரண்டு நபர்கள் குறித்து நான் ஒரு கதை சொல்லுவேன். அதில், ஒருவரின் பெயர் டாஷ், இன்னொருவர் பெயர் டாஷ் டாஷ். இயக்குநரிடம், ஏன் இவ்வளவு கடினமான பெயர் என்று கேட்டேன். சுலபமாக இருந்தால், அதில் என்ன வித்தியாசம் இருக்கும் என்று கூறிவிட்டார். ட்ரெய்லர் பார்த்துவிட்டு, 'ரிச்சி' ஆக்‌ஷன் படம் என்று நினைத்தனர். ஆனால், இது ஆக்‌ஷன் படம் கிடையாது.

எந்த மாதிரி புத்தகம் வாசிப்பீர்கள்?

கற்பனைக் கதைகள் அதிகம் வாசித்ததில்லை. தொழில் வியாபாரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இப்போது, ஆங்கில சீரீஸ் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

உங்களுடைய திறனாய்வாளர்களுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது?

எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. என் படங்களைப் பற்றி உண்மையான கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.

தமிழில் கடைசியாக நீங்கள் பார்த்த படம்?

'விக்ரம் வேதா' பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.

'பிரேமம்' படத்தின் வெற்றியை நீங்கள் பயன்படுத்திக்கொண்டீர்களா?

'பிரேமம்' படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியைக் கொடுத்தது. இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் பெயர் சொல்லும் படத்தை கடவுள் தருவார், அப்படிப்பட்ட படம் 'பிரேமம்'.

இரண்டு ஹீரோ படங்களில் நடிப்பீரகளா?

கண்டிப்பாக. நல்ல கதை அமைந்தால், இரண்டு ஹீரோ படங்களில் நடிப்பேன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in