

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 8 நிமிட இன்டர்வல் ப்ளாக் ரசிகர்களை திரையரங்கில் ஆர்ப்பரிக்க வைக்கும் என படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான படமாக இருக்கும். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் இன்டர்வல் ப்ளாக் பார்க்கும்போது எங்களுக்கே கூஸ்பம்பாக இருந்தது. இடைவேளைக் காட்சியை பொறுத்தவரை 8 நிமிடம் வரும். நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.