

சென்னை: "நான்கு வருடங்கள் கழித்து இமயமலை சென்றுவந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உ.பியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். அப்போது யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்
இதனிடையே, இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான்கு வருடங்கள் கழித்து இமயமலை சென்றுவந்தது மகிழ்ச்சியாக உள்ளது. பயணம் மிக நன்றாக அமைந்தது. ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளர், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
அப்போது உத்தரபிரதேச பயணத்தின் போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது தொடர்பாகவும், அவரின் காலில் விழுந்தது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினி, "நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது. சந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேட்ட உடன் "நான் அரசியல் பேச விரும்பல" என்றுக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் நடிகர் ரஜினி.