

சினிமாவில் காம்பினேஷன் பற்றி முக்கியமாக பேசுவார்கள். சில ‘காம்பினேஷன்’களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பும் வரவேற்பும் கொண்ட ‘காம்பினேஷன்’ என ஜெய்சங்கர்–ஜெயலலிதாவை சொல்வார்கள். இருவரும் 1965-ம் ஆண்டுதான் அறிமுகமானார்கள். பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் இவர்கள் இணைந்த முதல் படம், ‘நீ’. ஜெய்சங்கருக்கு இது நான்காவது படம்.
கல்லூரி மாணவனான ஜெய்சங்கர், ஏழைப்பெண் ஜெயலலிதாவை காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்வார். பின்னர் சமாதானமாகி வீட்டுக்கு வருவார்கள் இருவரும். நன்றாக போய்கொண்டிருக்கும் வாழ்வில், ஜெய்சங்கரின் மாஜிஸ்டிரேட் அத்தான் ஜெயலலிதா பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூற, மொத்த குடும்பமும் பதற்றமடைகிறது. ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். பிறகு எப்படி ‘சுபம்’ ஆகிறது என்பதுதான் கதை. இதில் ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
சயின்டிஸ்டாக நாகேஷ் வரும் காட்சிகளில் கலகலப்பு. எஸ்.வி.சகஸ்கரநாமம், பண்டரிபாய், எஸ்.வி.ராமதாஸ் உட்பட பலர் நடித்த இந்தப் படம், வணிகரீதியாக வெற்றிபெற்றது. கனக ஷண்முகம் இயக்கிய இந்தப் படத்துக்கு சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதியிருந்தார். இவர் கட்டபொம்மன், கர்ணன், எங்க வீட்டு பிள்ளை உட்பட பல புகழ்பெற்ற படங்களுக்கு வசனம் எழுதியவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்குப் பிறகு இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடி பிரிந்து தனித்தனியாக இசை அமைக்கத் தொடங்கினார்கள். பிரிவுக்குப் பின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம் இது. பாடல்களை வாலி எழுதியிருந்தார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘அடடாஎன்ன அழகு...’, சுசீலாவின் குரலில், ‘வெள்ளிக்கிழமை விடியும் வேளை...’ உட்பட பாடல்கள் அனைத்தும் ஹிட். விநாயகா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், 1965-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.21) வெளியானது.