இதே நாளில் வெளியான ‘வீர அபிமன்யு’

இதே நாளில் வெளியான ‘வீர அபிமன்யு’
Updated on
1 min read

இந்திய புராண கதைகள், ஏராளமாகத் திரைப்படங்களாகி இருக்கின்றன. சினிமா தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இதுபோன்ற கதைகளே அதிகமாகத் திரையை ஆக்கிரமித்திருந்தன. அதில் ஒன்று ‘வீர அபிமன்யு’. மகாபாரத பாத்திரமான அபிமன்யுவின் கதையைச் சொன்ன படம் இது.

தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை வி.மதுசூதன ராவ் இயக்கி இருந்தார். சுமார் 70 படங்களுக்கு மேல் இயக்கிய தெலுங்கு இயக்குநர் இவர். இந்தப் படத்தில், ஏ.வி.எம்.ராஜன் அபிமன்யுவாகவும் ஜெமினிகணேசன் கிருஷ்ணராகவும், பாலாஜி அர்ஜுனனாகவும் டிகே.பகவதி துரியோதனனாகவும் நாகேஷ் உத்திரகுமாரனாகவும் நடித்திருப்பார்கள். காஞ்சனா உத்திரையாக நடித்திருப்பார். தெலுங்குக்கு காஞ்சனாவை மட்டும் வைத்துவிட்டு மற்றவர்களை அப்படியே மாற்றியிருந்தார்கள். அதில் சோபன்பாபு, அபிமன்யுவாகவும் என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவும் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்குப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இதில் இடம்பெற்ற,

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பாடலில் கண்ணதாசன் தேன் கொண்டு விளையாடியிருப்பார். பி.ஸ்ரீநிவாஸ்- சுசீலா குரலில் இந்தப் பாடல் இப்போதும் இனித்துக் கொண்டிருக்கிறது.

வணிகரீதியான வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சிலர் ஜெமினிகணேசனை கிருஷ்ணராக நடிக்க வைத்ததை விமர்சித்து இருந்தனர். தமிழிலும் ராமராவையே கிருஷ்ணராக நடிக்க வைத்திருக்கலாம் என்றனர். வெற்றிபெறவில்லை என்றாலும் புராணக் கதைக்காகவும் கண்ணதாசனின் பாடல்களுக்காவும் இந்தப் படம் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். இந்த வீர அபிமன்யு இதே நாளில்தான், 1965-ம் ஆண்டு வெளியானது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in