உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினி!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினி!
Updated on
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றார்.

இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்தார்.

நேற்று லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருக்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து இன்று மதியம் உ.பி மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in