

அனிருத் வளர்ச்சி எனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக, 'வேலையில்லா பட்டதாரி' சந்திப்பில் நடிகர் தனுஷ் கூறினார்.
தனுஷ், அமலா பால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் வேல்ராஜ். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தனுஷ் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் தமிழகம் உரிமையினை மதன் பெற்றிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது. அச்சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அச்சந்திப்பில் பேசிய தனுஷ், "'வேலையில்லா பட்டதாரி' என்னுடைய 25வது படம். சினிமாவிற்கு வந்து 14 வருடங்கள் ஆகிறது. முன்பு எல்லாம் சினிமாவிற்குள் நுழைவது தான் கஷ்டம், அவர்களுக்கு என்று தனி இடம் கிடைப்பது இப்போது உள்ள அளவிற்கு கஷ்டம் கிடையாது. இப்போது சினிமாவிற்குள் நுழைவது சுலபம், நிலைத்து நிற்பது தான் கஷ்டம்.
இந்த துறையில் நான் 14 வருடங்கள் இருக்கிறேன் என்றால் அதற்கு பலர் காரணம். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு 'வேலையில்லா பட்டதாரி' அமைந்ததில் சந்தோஷமாக இருக்கிறேன்.
'உத்தம புத்திரன்' போலவே இப்படத்திலும் நடிக்க விவேக் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு தான் சம்மதித்தார். அப்படத்தில் எங்களுடைய காமெடி காட்சிகளைப் போலவே, இந்தப் படத்திலும் வரவேற்பை பெறும்.
80, 90 களில் வெளிவந்த படங்களில், அனைத்து படங்களிலுமே மனோரமா ஆச்சி இருப்பார்கள். அந்த மாதிரி தான் இப்போது சரண்யா மேடமும் இருக்காங்க. என்னுடைய ஒப்பீடு சரியா இருக்கும் என நம்புகிறேன். மனோரமா ஆச்சிக்கு பிறகு மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. அந்த இடைவெளியை தற்போது சரண்யா மேடம் நிரப்பி இருக்கிறார். அவர்கள் என்னுடைய படத்தில் நடித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
அமிதாஷ் மற்றும் ரிஷி இருவரையும் இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறோம். என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கிறது. அது இவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த படத்திற்கு யானைப்பலம் என்றால் சமுத்திரக்கனி சார் தான்.
இந்த படத்திற்கு இந்தளவிற்கு எதிர்பார்ப்பு கிடைத்ததிற்கு காரணம் அனிருத்தின் பாடல்கள் தான். ஒரு காலத்தில் அனிருத்திற்கு உறுதுணையாக இருந்தேன். இப்போது எனக்கு உறுதுணையாக அனிருத் இருக்கிறார். இவரோட வளர்ச்சி என்னை பெருமையடைய வைக்கிறது.
இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் நான் தான் ஒல்லியான ஆளாக இருந்தேன். அனிருத் வந்ததிற்கு பிறகு என்னை யாரும் ஒல்லி என்று சொல்வதே இல்லை. முன்பு 'ஒல்லி பிச்சான்' நடிகர் என்று எழுதுவார்கள், அது சமீபகாலமாக வருவதில்லை. அதற்கு காரணம் என்னவென்று யோசித்த போது அனிருத் தான் காரணம் என்று புரிந்தது.
4 பாடங்களின் பாடல்கள் மூலமாக இவ்வளவு பெரிய உயரத்தினை தொட்டு இருப்பது பெரிய விஷயம் கிடையாது. கண்டிப்பாக கடவுளின் ஆசிர்வாதம் அனிருத்திற்கு இருக்கிறது. 4 படங்கள், 20 பாடல்கள் அனைத்துமே ஹிட் என்பது சாதனை என்றே சொல்லலாம். அவர் இதனை தொடர வேண்டும்.
தொடர்ந்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தால், அதன் மூலம் நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்" என்று கூறினார்.