

சென்னை: “தண்டனைகளும், கண்டனங்களும் மட்டுமே வெறுப்பு மனநிலையை மாற்றாது” என நாங்குநேரி சம்பவம் குறித்து பாடகர் அறிவு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics, chemistry, maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லிக் கொடுங்க! Anti-Caste மனநிலை மாணவப் பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படணும். இடஒதுக்கீடு ஒரு இலவசம், ஆண்ட பெருமைகள், சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவதுதான் சமகால கல்வியின் பிரதான நோக்கமாக இருக்கணும்.
சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலம் காலமாக சிந்திக் கிடக்கிறது என விவாதிக்காமல், எல்லா ரத்தமும் சிவப்பு என்றும், சாதியை ஓர் ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும் சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது” என்று பதிவிட்டுள்ளார்.