

கந்துவட்டி பிரச்சினையிலிருந்து விடுபட ஒருவருக்கொருவர் உதவும் கூட்டுறவை உருவாக்க வேண்டும் என்று நடிகரும், திரைப்பட இயக்கு நருமான பார்த்திபன் கூறியுள்ளார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைத்துரையினர் பலரும் தமிழ் திரையுலங்கில் நிலவும் கந்துவட்டி கொடுமைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறும்போது,
"அன்பு நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்.. அன்பு மட்டுமே நம்மை இணைக்கும் சக்தியாக இருக்கக் கூடும். அசோக்குமாரின் இந்த மரணம் நம்முடைய சினிமா கனவுக்குள் ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.
மனம் பிணமாய் கனக்கிறது. அசோக்குமாரை போன்ற உணர்வுபூர்வமாக இருக்கக் கூடிய நபர்கள் இனி இங்கு ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்தக் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் இங்கு கந்துவட்டி மட்டுமே நீடிக்கும். கெட்டவர்கள் மட்டுமே ஜீவிப்பார்கள். இந்த கந்துவட்டி வசூலிக்கும் முறை மிகக் கடுமையானது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் முதலில் நாம் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுதான் நாம் அடுத்து யோசிக்க வேண்டியது.
கந்துவட்டி தொடர்பாக ஒரு நபர்மீது நாம் குற்றம் சுமத்துகிறோம். இதில் மற்றுமொரு விஷயம் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உதவுவதில்லை, வட்டிக்கு கடன் அளிப்பவர்கள்தான் உதவுகிறார்கள் என்பது நமது மனதில் ஆழமாகப் பதிய வேண்டிய விஷயம். என் அம்மா தாலியை அடகு வைக்கவில்லை என்றால்? நான் படித்திருக்க முடியாது. என்னைப் போல நிறைய பேருக்கு இது பொருந்தும். அடகுக் கடைகள், வட்டிக் காரர்கள் இவர்கள் இடத்தில் நாம் அவசரத்துக்கு பணம் கேட்டு வாங்கி இருக்கிறோம். அதில்தான் நிறைய பேரின் வாழ்க்கை மாறியிருக்கிறது. ஆனால் வசூலிக்கும் முறையில், இப்படி கொடியவர்களிடமும், தப்பானவர்களிடமும்தான் நாம் பணம் வாங்கியுள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் வாங்காமல் இருப்பதற்கு என்ன செய்வது?, ஒருவேளை வாங்கிவிட்டால் நாம் என்ன செய்வது? உதாரணத்துக்கு வெறும் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக, என்னுடைய 74 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்றேன். இன்றைக்கு அதன் மதிப்பு 7 கோடி.
கடுமையாக உழைத்து சரியான படம் பண்ணினால் திரும்ப வாங்கிடலாம் என்று நினைத்தேன். ஆனால் 13 வருடங்கள் ஆகியும் என்னால் அதனை திரும்ப வாங்க முடியவில்லை. இன்றளவும் நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு அதுதான். ஆனால் மனதுக்குள் என்ன மகிழ்ச்சி என்றால், இதுவரை எவருக்கும் எந்தப் பணமும் மீதி வைத்ததில்லை,
நான் இதனை தற்புகழ்ச்சிக்காக கூறவில்லை. சமீபத்தில் இயக்குநர் சேரன் தனது அலுவலகத்தை காலி செய்கிற சூழ்நிலை. உடனே நான் எனது அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். நான் இருப்பது ஒரு வாடகை அலுவலகத்தில்தான். இருந்தாலும் அதனை நான் கூறினேன். இதுவும் நம்பிக்கை, நண்பர்களுக்கு நண்பர் நாம் உதவி செய்ய வேண்டும் ஒரு நோக்கம் மட்டுமே.
இந்த நோக்கம் மட்டும் உறுதியாகிவிட்டால், இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியும் என்பது என் நம்பிக்கை. நாம் இப்போது கூறுகிறோம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சங்கத்துக்கு வாருங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று, ஆனால் ஒரு மனிதன் பிரச்சினையில் இருப்போது நாம் தீர்த்து வைக்கிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறி? அந்த நேரத்தில் யார் உதவ முன்வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் மதுரையில் கந்துவட்டி மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தபோது, ஒருகிராமத்தில் சின்னபிள்ளையம்மா என்ற பெண், கந்துவட்டியிலிருந்து ஒரு கிராமத்தை காப்பாற்றுவதற்காக பத்து பேர் கிட்ட இருந்து குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி, அதிக வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு, அவர்கள் உழைத்து உழைத்து கொடுத்த பணத்தில் அந்த வட்டியை ஈடு செய்தார். இதற்காக அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவரது காலில் தொட்டு வணங்கினார்.
அந்த ஆண்டில்தான் ஜஸ்வர்யா ராயை உலக அழகியாக அறிவித்தார்கள். நான் அப்போது சின்னபுள்ளையம்மாவை சென்னை வரவழைத்து அவருக்கு கிரீடம் சூட்டினே. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சாதாரண ஒரு பெண்மணி சாதித்துள்ளார்? அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய சங்கங்கள, வசதியில் உள்ளவர்கள் செய்ய முடியாதா? நிச்சயம் செய்ய முடியும்.
எனக்கு சிரமம் இருக்கிறது என்றால், அதனை சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம்போய் பேசுவது இன்னும் சிரமமாக இருக்கிறது. உதவுவதற்கு யாரும் முன் வருவதில்லை. இந்த நிலையில் வட்டிக்கு பணம் வாங்கி அதனை திரும்ப கொடுக்கமுடியாமல் அவர்கள் அவமானப்படுத்தி அந்த அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிற நிலைமை ஒண்ணு. நமது பணத்தைக் கொடுத்துவிட்டு அதனை வாங்க முடியாமல் நாம் வட்டி கட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது மற்றொன்று.
ஒருத்தர் பணத்தை கொடுத்துவிட்டு நம்மை துன்புறுத்துகிறார், மற்றொவருக்கு நாம் பணத்தை கொடுத்துவிட்டு துன்பப்படுகிறோம். இதற்கு ஒரு வழியே இல்லாமல் உள்ளது.
இந்த கந்துவட்டி பிரச்சினையிலிருந்து நாம் தப்பிப்பதற்கு ஒரே வழி நமக்கு நாம் ஏற்படுத்துகிற கூட்டுறவு அமைப்பு, ஒருவருடைய சிரமத்துக்கு மற்றொருவர் உதவுவது. ஒருவர் நன்றாக இருந்தால் மட்டுமே அவர் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியும்.
இந்த கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுபட அனைவரும் கூடி பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும். இன்னொரு தடவை இம்மாதிரி பலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.