Published : 09 Aug 2023 05:10 AM
Last Updated : 09 Aug 2023 05:10 AM
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான போதை இருக்கும். சிலருக்கு அவங்க வேலையே போதையா இருக்கும். அதைப்போல நடிப்பு எனக்கு அப்படி இருக்கு. எப்படின்னா, ஒரு படத்துல நடிக்கும் போது நான் இந்துஜாவா இல்லாம, இன்னொருத்தராதானே மாறியிருக்கேன். அதாவது யாரோ ஒரு கேரக்டராகத் தானே இருப்பேன். அப்படி ஒவ்வொரு படத்துலயும் நான் வேறொரு ஆளா மாறுறது, வாழறது எனக்கு போதை மாதிரி இருக்கு”– லேசானப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை இந்துஜா.
‘மேயாத மானி’ல் தொடங்கி ‘பில்லா பாண்டி’, ‘மகாமுனி’, ‘பிகில்’, ‘மூக்குத்தி அம்மன்’, தனுஷின் ‘நானே வருவேன்’ என பயணித்தவர், இப்போது ‘பார்க்கிங்’ படத்தில் பேராசிரியையாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
“இந்தப் படத்துல என் கேரக்டரை இப்போ முழுமையா வெளிப்படுத்த முடியாது. ஆத்திகா என்ற பேராசிரியையா நடிக்கிறேன். ஒரு பார்க்கிங்கில் நடக்கும் பிரச்சினை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துது, அப்படிங்கறது கதை. ஒன்லைன் இப்படி இருந்தாலும் திரைக்கதைப் பரபரப்பாவும் விறுவிறுப்பாவும் இருக்கும். இயக்குநர் சிறப்பா உருவாக்கி இருக்கார். சில சவாலான காட்சிகள்ல நடிச்சிருக்கேன். இதுவரை பண்ணாத சில விஷயங்களைச் செய்திருக்கேன். அதை இப்போ சொன்னா, கதையை சொல்ற மாதிரி ஆயிடும். ஹரிஷ் கல்யாண் நாயகனா நடிச்சிருக்கார். நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசமா இருப்பார்” என்கிறார் இந்துஜா.
ஆரம்பத்துல கேரக்டர் ரோல் பண்ணியிருக்கீங்க.. தனுஷின் ‘நானே வருவேன்’ படத்துல நாயகியா நடிச்சிருந்தீங்க. இந்தப் படமும் அப்படித்தான். உங்க பயணம் எதை நோக்கியதா இருக்கு?
ஹீரோயினா நடிக்கறதுதான் என் நோக்கம். அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கு. கேரக்டர் ரோல் பண்ணினா, ஒரே மாதிரியான வேடங்கள்லயே தள்ளப்படும் நிலை இருக்கு. அதைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குப் போகணும்னு நினைக்கிறேன். அதனால கதாநாயகியா நடிக்கத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் நிறைய கதாநாயகிகள் வந்துட்டு இருக்காங்க. உங்களுக்கான போட்டி எப்படி இருக்கு?
போட்டி அப்படிங்கறதைத் தாண்டி, திறமையானவங்க எங்கேயும் எப்பவும் நிலைச்சு நிற்க முடியும், அப்படிங்கறதுக்கு நிறைய உதாரணம் இருக்கு. சமூக வலைதளங்கள் வந்த பிறகு, நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு வாரமும் திறமையான, அழகான நடிகைகள் வந்துட்டு இருக்காங்க. அவங்களுக்குன்னு தனித்துவமான ஏதோ ஒன்னு இருக்கு. ‘இவங்க கால்ஷீட் இல்லையா, அவங்களைப் பார்ப்போம்’னு இயக்குநர்களுக்கு, நடிகைகளைத் தேர்வு பண்றதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. ஆனாலும் திறமை இருந்தா நிச்சயம் நல்ல இடத்துக்கு வர முடியும். அதனால எனக்கு அது போட்டியா தெரியல.
சில வருஷங்களுக்கு முன்னால வரை தமிழ்ப் பேசும் நடிகைகள் சினிமாவுக்கு வர்றது ரொம்ப குறைவு. இப்ப உங்களைப் போல நிறைய பேர் வர்றாங்க...
நான் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடும்போது கூட ‘நான் தமிழ்ப் பொண்ணு’னு சொன்னா, ‘தமிழா?’ன்னு இளக்காரமா பார்த்திருக்காங்க. ஏன் அப்படி நடந்துகிட்டாங்கன்னு எனக்குத் தெரியலை. இப்ப சினிமாவே மாறிடுச்சு. ஓடிடி தளங்கள் வந்த பிறகு பார்வையாளர்களும் எல்லா படங்களையும் பார்க்கிறாங்க. அதனால இப்ப கதையை உள்வாங்கி நடிக்கிறதுக்குத் தாய்மொழி அவசியம்னு இயக்குநர்களும் நினைக்கிறாங்க. தமிழ் பேசும் நடிகையா இருந்தா எளிதா புரிஞ்சு, நடிக்க முடியும். டப்பிங் பேச முடியும்னு நினைக்கிறாங்க. அதனால தமிழ் பேசும் நடிகைகளும் அதிகமா வர்றாங்க.
நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள் இப்ப அதிகமா வருது. உங்களுக்கு அதுல ஆர்வம் இருக்கா?
அந்த மாதிரி கதைகள் எனக்கும் வந்துட்டு இருக்கு. வழக்கமான ரோல்களை பண்ண விருப்பமில்லை. பளிச்சுன்னு நிற்கிற மாதிரி ஒரு பெண்ணிய கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். அது போல ஒரு கேரக்டருக்கு காத்திருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT