“அந்த இரண்டு கண்களும் ரத்தினவேல் கதாபாத்திரமும்!” - ஃபஹத் ஃபாசிலை கொண்டாடும் மாரி செல்வராஜ்

“அந்த இரண்டு கண்களும் ரத்தினவேல் கதாபாத்திரமும்!” - ஃபஹத் ஃபாசிலை கொண்டாடும் மாரி செல்வராஜ்
Updated on
1 min read

சென்னை: ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரில் செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னணி மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் இன்று (ஆகஸ்ட் 08) தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்!” என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in