

ஜூலை 22ம் தேதி நடைபெறவிருந்த 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை யு,.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் இசையை ஜூலை 22ம் வெளியீட்டு விழாவினை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வந்தார்கள். சென்னை வர்த்தக மையத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு இசை வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது இந்த இசை வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் தனஞ்ஜெயனிடம் கேட்ட போது "'அஞ்சான்' படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருப்பதால் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அதுமட்டுமன்றி, சென்னை வர்த்தக மையத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல.
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டும். ஆகவே, 22ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கும் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் ட்ரெய்லர் மற்றும் 2 பாடல்கள் திரையிட இருக்கிறோம். அதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்வார்கள். 23ம் தேதி முதல் கடைகளில் படத்தின் இசை சி.டிக்கள் கிடைக்கும்" என்றார்.