

சென்னை: ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன், ஷீலா ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு ‘வேம்பு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ். விஜயலட்சுமி தயாரிக்கும் இதில், மாரிமுத்து, ஜெயராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைக்கிறார். ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
படம்பற்றி ஜஸ்டின் பிரபு கூறும்போது, “இதற்கு முன் தூய்மை பணியாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி ‘குப்பைக்காரன்’ என்ற குறும்படத்தை இயக்கி, சர்வதேச விருதும் பெற்றுள்ளேன். இந்தப் படத்தில், ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்தச் சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை, தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார். அவள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை சொல்கிறேன்” என்றார்.