மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி பணம் பெற்றேனா? - நடிகை சமந்தா விளக்கம்

மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி பணம் பெற்றேனா? - நடிகை சமந்தா விளக்கம்

Published on

ஹைதாராபாத்: மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா ரூ.25 கோடி பணத்தை நடிகர் ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரியில், “மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூ.25 கோடி வாங்கினேனா?. யாரோ தவறான தகவலை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். என் சிகிச்சைக்காக இதிலிருந்து ஒரு சிறிய தொகையை செலவிடுவது மகிழ்ச்சியே.

என்னுடைய வேலையிலிருந்து நான் பெற்ற பணம் மூலம் என்னை நானே கவனித்துக்கொள்ள முடியும். நன்றி. மயோசிடிஸ் நோயால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை தொடர்பான தகவல்களை பொறுப்புடன் வெளியிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தசை அழற்சிக்கான மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இதனால் சில தயாரிப்பாளர்களிடமிருந்து தான் ஏற்கெனவே பெற்ற முன் பணத்தைத் திருப்பி அளித்ததாகவும் கூறப்பட்டது. தற்போது அவர் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

நடிகை சமந்தா மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளதாக தெலுங்கு சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in