இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சிட்னி சம்பவம் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், 8-வது முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்; இத்தகைய இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், ஜிகர்தண்டா, கபாலி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர், தற்போது ரஜினி - ரஞ்சித் கூட்டனியில் உருவாகிவரும் காலா திரைப்படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி விமானநிலையத்தில் தனக்கு நேர்ந்த வேதனை அனுபவம் குறித்து அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"சிட்னி விமான நிலையத்துல் என்னை அதிகாரிகள் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதுபோன்று நோக்கம் ஏதுமின்றி என்னை சிட்னி விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்துவது இது 8-வது முறையாகும். ஏதோ ரசாயன வஸ்து பயன்பாடு குறித்து சோதனைக்கு உட்படுத்துவதாகக் கூறினர். அதிகாரிகள் என்னிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டனர். எனது அறிவுபூர்வமான விளக்கங்களைக்குட்ட ஏளனம் செய்தனர். இதுபோன்ற இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.
