

சந்தானம் நாயகனாக நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் வெளியிடவிருக்கிறார். இந்தப் படத்துக்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் - வைபவி நாயகன் நாயகியாக நடிக்க சேதுராமன் இயக்கியிருக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. நடிகர் சிலம்பரசன் இந்தத் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்குகிறார். ஏற்கனவே படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 6-ம் தேதி அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் காணொலிப் பதிவு ஒன்றைப் பதிவேற்றியிருந்தார்.
அதில், "படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 6 அன்று நடக்கும். இதை அறிவிக்கப் போகிறேன் என சிம்பு அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர் 'இதில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. அதையும் சேர்த்து அறிவித்துவிடு என்றார்'. அது என்னவென்று கேட்டதற்கு 'சிம்புவின் இந்த இசையை வெளியிடப்போவது தனுஷ்' என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சிம்புவும் தனுஷும் ஒரே மேடையில் தோன்றப்போவது, அதுவும் எனது படத்துக்காக என்று நினைக்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. டிசம்பர் 6 அவர்களோடு சேர்ந்து நான் உங்களை சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்" என்று முடித்துள்ளார்.