

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் (ட்ரெய்லர்) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின.
இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் இன்று (ஆகஸ்ட் 02) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ட்ரெய்லர் என்று அறிவிக்காமல் ஷோகேஸ் என்று அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்துக்கும் இதே போல நேரடியாக ட்ரெய்லர் என்று குறிப்பிடாமல் ‘ப்ரிவ்யூ’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே பாணியில் தற்போது ‘ஜெயிலர்’ குழுவினரும் ட்ரெய்லர் என்ற வார்த்தைக்கு பதில் ‘ஷோகேஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.