

சென்னை: வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் ‘வெப்’ . அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நட்டி என்ற நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத், ‘நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ளார்.
ஆக.4ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அவர் கூறியதாவது:
நான் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நாயகன் நட்டி, நான்கு பெண்களைக் கடத்திச் செல்கிறார். அவர் ஏன், எதற்காகக் கடத்துகிறார் என்று ஒரு கதை செல்லும். மற்றொரு பக்கம் சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட பூச்சிகளைப் போல, மன அழுத்தத்தைக் குறைப்பதாகச் சில விஷயங்களைப் பலர் செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினை பற்றி இன்னொரு லேயர் செல்லும். இந்தப் படத்தில் சமூகத்துக்குத் தேவையான ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறோம்.
நட்டி பங்கேற்கும் சில காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான குகை செட் அமைத்தோம். ரூ.15 லட்சம் செலவில் உருவான இந்த செட்டை, கலை இயக்குநர் அருண் சங்கர் அருமையாக அமைத்திருக்கிறார். நட்டி எங்களை முழுமையாக நம்பினார். படம் தொடங்கியது முதல் கடைசி வரை பல உதவிகளையும் செய்தார்.
இவ்வாறு ஹாரூண் கூறினார்