

2.0 படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது. படத்தின் முதல் டிஜிட்டல் திரையிடல் அமேசான் ப்ரைமில் இருக்கும்.
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சமீபத்தில் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் நடந்தது.
படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று பதிப்புகளுக்கான டிஜிட்டல் / ஸ்ட்ரீமிங் உரிமத்தை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது.
அமேசன் ப்ரைம் வீடியோ நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில், "இந்த மிக முக்கியமான ஒப்பந்தத்தின் மூலம், அமேசன் ப்ரைம் தனது பாலிவுட் மற்றும் மாநில மொழி திரைப்பட நூலகத்தை இன்னும் வலுவாக்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட படைப்பின் ஸ்ட்ரீமிங் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. ரஜினிகாந்த், அக்ஷய்குமார் இருவரும் அற்புதமான நடிகர்கள். நம்பமுடியாத ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்கள். விரைவில் அந்த ரசிகர் பட்டாளத்துக்கு , ரஜினி நடிப்பில் என்றும் நினைவிலிருக்கும் படத்தின் 2ஆம் பாகத்தை, அவர்களுக்கு பிடித்த கருவிகளில் ஸ்ட்ரீம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.