சந்திரமுகி 2 | வேட்டையன் ராஜா ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது

சந்திரமுகி 2 | வேட்டையன் ராஜா ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது
Updated on
1 min read

சென்னை: ’சந்திரமுகி 2’ படத்தின் ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை நாளை (ஜூலை 31) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை நாளை (ஜூலை 31) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘சந்திரமுகி’ படம் வெளியானபோது ரஜினி நடித்த இந்த வேட்டையன் ராஜா கதாபாத்திரமுமும் அவர் சொல்லும் ‘லகலகலக’ என்ற வார்த்தையும் பெரும் பிரபலமடைந்தன. தற்போது இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட பணிகள் முடிந்து வரும் செப். 15ஆம் தேதி ‘சந்திரமுகி 2’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in