“சின்ன காகம் - பெரிய கழுகு” - ரஜினி சொன்ன குட்டிக்கதை இணையத்தில் வைரல்

“சின்ன காகம் - பெரிய கழுகு” - ரஜினி சொன்ன குட்டிக்கதை இணையத்தில் வைரல்
Updated on
1 min read

சென்னை: ’ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினி தனது பேச்சின்போது கூறிய காகம், கழுகு குறித்த குட்டிக் கதை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினி சொன்ன குட்டிக்கதை: “காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும் பொழுது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்” இவவாறு ரஜினி கூறினார்.

ரஜினி இந்த குட்டிக் கதையை யாரை மனதில் வைத்துச் சொல்கிறார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். ரஜினி சொன்ன குட்டிக்கதை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in