

'காற்று வெளியிடை' படத்தில் தனது கதாபாத்திரம் பரிசோதனை முயற்சி மட்டுமே, அது மற்றவர்களுக்கான ஆதர்சம் இல்லையென்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான படம் 'காற்று வெளியிடை'. ஆனால் படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மேலும் கதாநாயகன் விசி-யின் (VC) பாத்திரப்படைப்பும் விமர்சனத்துக்குள்ளானது.
தற்போது நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று பட விளம்பரங்களுக்காக ஊடகங்களைச் சந்தித்து வருகிறார். தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்துள்ள பேட்டியில், 'காற்று வெளியிடை' படத்தின் விசி கதாபாத்திரம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு:
"விசி புரிந்துகொள்ள எளிதான கதாபாத்திரமல்ல. இது 'அலைபாயுதே' போன்ற படம் அல்ல, ஒரு பரிசோதனை முயற்சி தான் என்பதில் மணி சார் தெளிவாக இருந்தார். விசி கதாபாத்திரத்தின் பால்யம் நன்றாக இருக்கவில்லை. அவன் எந்த திட்டமிடலுமின்றி அந்தந்த நொடியில் வாழ்பவன். பல உறவுகளில் இருந்தவன். சாதாரணமானவன் கிடையாது. ஒரு போர் விமானி வேறு.
போர் விமானிகள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பயிற்சி எடுத்துவிட்டு போருக்காக காத்திருக்க வேண்டும். 40 வயதில் அவர்கள் பணி ஓய்வு எடுக்கும்வரை அந்தப் போர் வராமல்கூட போகலாம். அப்போது அத்தனை பயிற்சியும் வீண் தான். அந்த ஆதங்கத்தை சமாளிக்க பல வழிகள் முயற்சிக்கப்படுகின்றன.
காற்று வெளியிடை படத்தில் காட்டியது, காதலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதர்சம் அல்ல. பல பெண்கள் படம் பார்த்துவிட்டு, கொடுமையான உறவுகளில் இருந்து விலகியதாக கூறினர். விசி-ஐ போன்ற ஒருவனை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டுமா, அதுதான் உண்மையான காதலாக சொல்லப்படுகிறதா என்றெல்லாம் சிலர் எங்களிடம் கேள்வி கேட்டனர்.
நாங்கள் காட்டியது அந்த ஒரு நபரின் பயணம் அட்டுமே. அவன் பல சிக்கல்களை சந்திக்கிறான், மனந்திருந்துகிறான், காதலியை ஒரு முறை சந்தித்து மன்னிப்பு கேட்க நினைக்கிறான். அவள் ஏற்றுக்கொள்வாள் என இவன் நினைக்கவே இல்லை. ஏனென்றால் இவன் அவளை நடத்திய விதம் அப்படி. இவன் நினைப்பிலேயே அவள் இருப்பது அவனுக்கே ஆச்சரியம்தான்.
60களில் வெளியான போர் வீரர்களை சர்வதேசப் படங்களில் காட்டியதைப் போலத்தான் விசியின் கதாபாத்திரத் தன்மையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படங்களில் போரிலிருந்து திரும்பியவர்களால் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியாது அவதிப்படுவார்கள்".