அனிருத் குரலில் ‘மஞ்சள் வீரன்’ அறிமுகப் பாடல்?
சென்னை: ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் எனும் இளைஞருக்கு பல லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கனோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. ஹெல்மெட் போடாமல் அதிவேகத்தில் பைக் ஓட்டுவது, காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என இவர் அவ்வப்போது சிக்கலில் மாட்டிக் கொள்வார்.
சமீபத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல வடிவமைக்கப்பட்ட அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
