Published : 23 Jul 2023 06:26 PM
Last Updated : 23 Jul 2023 06:26 PM

திரை விமர்சனம்: கொலை

பாடகியும் மாடலுமான லைலா (மீனாட்சிசவுத்ரி) அவர் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அதை விசாரிக்கும் பொறுப்புஇளம் ஐபிஎஸ் அதிகாரி சந்தியா மோகன்ராஜிடம் (ரித்திகா சிங்) ஒப்படைக்கப்படுகிறது. சந்தியா, முன்னாள் புலனாய்வு அதிகாரி விநாயக் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் சம்மதிக்கிறார். லைலாவின் காதலரும் நீதிபதியின் மகனுமான சதீஷ் (சித்தார்த்த சங்கர்), ஃபேஷன் புகைப்படக்காரர் அர்ஜுன் (அர்ஜுன் சிதம்பரம்), லைலாவின் மேலாளர் பப்லு (கிஷோர் குமார்),மும்பை மாடலிங் நிறுவன பிரமுகர் ஆதித்யா(முரளி சர்மா) ஆகியோரில் ஒருவர் கொலையாளி என்னும் கோணத்தில் விசாரணை நடக்கிறது. உண்மையில் லைலாவைக் கொன்றது யார்? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக் கதை.

2013-ல் வெளியான ‘விடியும் முன்’ படத்துக்குப் பிறகு பாலாஜி கே குமார் இயக்கியிருக்கும் படம் இது. ஒரு கொலை, அதைச் சுற்றி பல மர்ம முடிச்சுகள், விசாரணை அதிகாரிகளைக் குழப்பும் நிகழ்வுகள் என துப்பறியும் கதைக்கான அடிப்படை அம்சங்களை அழகாக நிறுவி, ஆரம்ப காட்சிகளிலேயே பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக கொலை நிகழ்ந்த வீட்டுக்குள் கொலையாளி எப்படி உள்ளே நுழைந்தார் என்பதைக் கண்டறிய முடியாமல் இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் விசாரணைக் காட்சிகளை சுவாரசியமாக்குகின்றன.

சந்தேக வளையத்துக்குள் இருப்பவர்கள் கொலை நடந்தபோது என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதை விவரிக்கிறார்கள். இதன் மூலம் ஒரே சூழலை வெவ்வேறு காட்சிகளாக முன்வைப்பது ‘ரஷோமான்’, ‘அந்த நாள்’ உள்ளிட்டப் படங்களின் பாணியில் இருந்தாலும் புதுமையான காட்சி அமைப்பு மூலம் ரசிக்க முடிகிறது.

லைலாவின் முன்கதை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லப்படுவது மர்ம முடிச்சுகளை அதிகரித்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பூட்டுகிறது. குறிப்பாக மும்பை மாடலிங் நிறுவனம் தொடர்பான காட்சிகள் பெரிய தொய்வு. விநாயக் மகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தொடர்பான எமோஷனல் காட்சிக்கும் மையக் கதைக்கும் எந்த தொடர்புமில்லை. உண்மையான கொலையாளி யார் என்று தெரியும்போது எந்த அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. கொலைக்கான காரணமும் பலவீனமாக இருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

விஜய் ஆண்டனி, புலனாய்வு அதிகாரியின் புத்திக்கூர்மையையும் நிதானத்தையும் நடுத்தர வயது மனிதரின் முதிர்ச்சியையும் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். மீனாட்சி சவுத்ரி சிறப்பாக நடித்திருக்கிறார். ரித்திகா சிங் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். மாடலிங் நிறுவன அதிபர் ராதிகா எந்தத் தாக்கமும் செலுத்த இயலாத கதாபாத்திரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். கிஷோர் குமார் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை திரைக்கதைக்குத் தேவையான மர்ம உணர்வை மேம்படுத்துகிறது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் செல்வா ஆர்.கேயின் படத்தொகுப்பும் படத்தின் புதுமையான கதைகூறல், காட்சியமைப்புக்கு வலுவாகத் துணைபுரிந்திருக்கின்றன.

கதைகூறல் முறையும் காட்சியமைப்புகளும் கவர்ந்தாலும், திரைக்கதைக் கோளாறுகளால் நிறைவைத் தரத் தவறுகிறது இந்தக் ‘கொலை’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x