

சென்னை: “சினிமாவில் 10 வருடங்கள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான்” என நடிகர் பரத் பேசியுள்ளார்.
நடிகர் பரத்தின் 50-வது படமான ‘லவ்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், “சினிமாவை பொறுத்தவரை தொடக்கம் நன்றாக இருந்தாலும் போக போக கடினமானதாக மாறிக்கொண்டிருக்கும். 10 வருடங்கள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். அந்த மொத்த திரைப் பயணமே கடினமாகத்தான் இருக்கும். இன்று நான் 50 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் ஒரு சில படங்கள் சொதப்பியிருக்கிறேன்.
படம் முடித்ததிலிருந்து ரிலீஸ் தேதி அறிவிப்பது வரை பெரும் மன உளைச்சலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆடியோ வெளியீட்டு விழா நடத்தி படத்தை சரியான நபரிடம் சேர்த்து ரிலீஸ் செய்வது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. சினிமா... ஓடிடி, தியேட்டர் என இரண்டாக பிரிந்துவிட்டது. அதைப்பற்றி பேசினால் அது பெரும் விவாதமாகிவிடும்.
இந்தப் படம் ஒரு நல்ல கன்டென்ட் படம். இதனை வழக்கமாக படமாக பார்க்காதீர்கள். படம் உங்களை போராடிக்காமல் என்டர்டெயின் செய்யும். சினிமாவை பொறுத்தவரை நாம் ஒன்று நினைத்திருப்போம். அது நடக்காது. நினைக்காதது சில சமயங்களில் நடக்கும். எது எப்படியோ லவ் படம் உங்களை நிச்சயம் ஏமாற்றாது” என பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “அன்று காதல் படத்தில் நடித்தினேன். இன்று என்னுடைய 50-வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்திருக்கிறேன். ‘கண்டேன் காதலை’ போன்ற காதல் படங்கள் எனக்கு கைகொடுத்திருக்கின்றன” என்றார்.