

சென்னை: மறைந்த சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையை, திரைப்படமாக இயக்கியவர் விக்கி. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராஃபிக் ராமசாமியாக நடித்திருந்தார். ரோகிணி, பிரகாஷ்ராஜ், அம்பிகா, சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். 2018ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதை அடுத்து இயக்குநர் விக்கி, குழந்தைகள் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, "இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்து பதில்கள் நிறைந்து இருக்கின்றன. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது.
கூகுளும், யூடியூபும் வருவதற்கு முன், குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் படம் இது. கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்றார்.